வடைக்கு காசு கேட்ட கடைக்காரரிடம் வாக்குவாதம்... பஞ்சாயத்துக்கு வந்தவர் மீது சரமாரி தாக்குதல்...

கோவை டீக்கடை ஒன்றில் வடை வாங்கியதில் காசு கொடுப்பது தொடர்பாக கடை உரிமையாளருடன் பெண்ணொருவர் தனது ஆதரவாளர்களுடன் சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வடைக்கு காசு கேட்ட கடைக்காரரிடம் வாக்குவாதம்... பஞ்சாயத்துக்கு வந்தவர் மீது சரமாரி தாக்குதல்...

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் அருணகிரி. இவரது கடை அமைந்துள்ள கட்டடத்தின் அருகில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு டீ, வடை அனுப்புவது வழக்கம். இதே போன்று கடையின் அருகில் இருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு டீக்கடையில் இரண்டு வடை வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பணம் கொடுக்காத நிலையில் இன்று அப்பெண் அரிணகிரியின் டீக்கடைக்கு வந்துள்ளார்.

அப்போது  வாங்கிய வடைக்கான பணத்தை தருமாறு கடையின் உரிமையாளரான அருணகிரி கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டீ கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண், தனது நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோரையும் வரவழைத்து டீ கடை உரிமையாளரிடம்  தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர் ஒருவர், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது என கூறி இரு தரப்பிற்கும் இடையே சமாதானத்தில் ஈடுபடவே  அவருடனும் வாக்குவாத்தில் ஈடுபட்ட அப்பெண் உள்ளிட்டோர், திடீரென அந்த நபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு  பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமரச படுத்த முயன்றார். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை மீறி வடைக்கு காசு கேட்ட விவகாரம் குறித்து இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர். பின்னர் போலீசார் இரு தரப்பினரையும்  எச்சரித்து அனுப்பினர். வடை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.