இன்ஸ்டா தோழிக்காக கொலை செய்த வாலிபர்... கூட்டாளிகளுடன் கம்பி எண்ணும் பரிதாபம்...

கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்ஸ்டா தோழிக்காக கொலை செய்த வாலிபர்... கூட்டாளிகளுடன் கம்பி எண்ணும் பரிதாபம்...

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 6பேரை போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த 18ஆம் தேதி பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சங்காடுமேடு பகுதியில் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை வருவாய்த்துறை முன்னிலையில் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கொலையில் முக்கிய குற்றவாளியான அசோக் மற்றும் அவனது கூட்டாளி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல்துறையினர் அசோக் மற்றும் அவனது கூட்டாளிகள் என 6பேரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரவிச்சந்திரன் - செல்வி தம்பதியரின் மகன் பிரேம்குமார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை பிரேம்குமார் காதலித்து அவர்களை அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டி அவ்வப்போது பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவி பிரேம்குமார் தங்களை மிரட்டி வருவது குறித்து தமது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் சகோதரி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் தமக்கு பழக்கமான செங்குன்றத்தை சேர்ந்த அசோக் என்பவரிடம் இதுகுறித்து எடுத்து கூறி தமது தங்கையை மிரட்டும் அசோக்கை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இன்ஸ்டா தோழன் அளித்த ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவிகள் பிரேம்குமாரை செங்குன்றத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி பிரேம்குமார் தமது நண்பன் ப்ரவீனுடன் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் வந்துள்ளார். அப்போது தமது கூட்டாளிகளுடன் அங்கிருந்த அசோக் பிரேம்குமாரை தாக்கி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் அவரை ஆந்திரா நோக்கி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கும்மிடிப்பூண்டி அருகே ஈச்சங்காடுமேடு பகுதியில் அடித்து கொலை செய்து புதைத்துள்ளனர். இன்ஸ்டா தோழிக்காக தமது கூட்டாளிகளுடன் கல்லூரி மாணவன் பிரேம்குமாரை கொலை செய்ததை அசோக் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து இன்ஸ்டா தோழிக்காக கல்லூரி மாணவரை கொலை செய்த அசோக் மற்றும் அவரது கூட்டாளிகள் லெவின், பிரவீன்குமார், ஜெகநாதன், ஸ்டீபன், ஞானசேகரன் ஆகிய 6பேரை கைது செய்த ஆரம்பாக்கம் போலீசார் அவர்களை பொன்னேரியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய இன்ஸ்டா தோழியான 17வயது சிறுமி மற்றும் 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் என 3 சிறுமிகளும் சிறார் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இது போன்ற பாலியல் தொல்லைகள் ஏற்படும் காலங்களில் பெற்றோர் மூலம் காவல்துறையில் புகார் அளித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையினரின் அறிவுரையாக உள்ளது.