ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் மனைவியிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது!

சென்னையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியிடம் 7 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் மனைவியிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது!

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷணன். இவர் நிதித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவராவார். இவரது மறைவுக்குப் பின் இவரது ஓய்வுபெற்ற ஆசிரியையான மனைவி ஆனந்தி(75) தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி கோட்டூர் தோட்டம் 4வது பிரதான சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஆனந்தியின் கழுத்திலிருந்த 7 சவரன் தங்க செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

இது தொடர்பாக ஆனந்தி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் சென்ற இடங்களிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபர் செல்போனில் பேசுவது பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அந்த பகுதியில் செல்போனில் பேசிய நபரின் தொடர்பு எண்ணை கண்டுபிடித்து அதை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட தொடர்பு எண்ணுக்கு வந்த அழைப்புகளையும் அந்த எண்ணில் இருந்து பேசப்பட்ட அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் சென்னை பார்க் டவுனைச் சேர்ந்த பிண்டு மண்டல் (41) என்பவனுடன் பேசி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பிண்டு மண்டலை பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவன் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரின் கூட்டாளி என்பதும் செயின் பறிப்பில் ஈடுபட்டவன் வடமாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமல்(30) என்பதும் தெரியவந்தது. மேலும், அமல் மகாராஷ்டிராவிற்கு தப்பிச் சென்றதை அறிந்த போலீசார் அவனை பிடிக்கும் பொருட்டு கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கடந்த 21 ஆம் தேதி மகாராஷ்டிரா விரைந்தனர். பின் அங்கு அவனது செல்போனை டிராக் செய்து அமல் என்பவனை சுற்றி வளைத்து கைது செய்து டிரான்சிட் வாரண்ட் பெற்று கடந்த 29 ஆம் தேதி சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட அமல் என்பவனிடம் இருந்தும் அவனது கூட்டாளியான பிண்டு மண்டல் என்பவனிடம் இருந்தும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து நேற்று இரவு இவ்விருவரையும் கோட்டூர்புரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு தீவிய முயற்சிக்குப் பின் வட மாநிலம் சென்று குற்றவாளிகளை கைது செய்துள்ள கோட்டூர்புரம் காவல் குழுவினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.