விவசாயியை எட்டி உதைத்த விவகாரம்: விஏஓ மற்றும் தலையாரிக்கு வட்டாட்சியர் நோட்டீஸ்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயியை ஊராட்சி செயலர் எட்டி உதைத்த விவகாரத்தில், விஏஓ மற்றும் தலையாரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் மற்றும் எஸ்.ஐ, ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயியை ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இதையும் படிக்க : நடை பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார்...!

இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை எனக்கூறி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் தலையாறி முத்துலட்சுமி ஆகியாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் செந்தில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

இதனிடையே, விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் ஆய்வாளர் சங்கர கண்ணன் மற்றும் வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் செல்லப்பாண்டி ஆகியோரை விருதுநகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் உத்தரவிட்டுள்ளார்.