பாஜக தலைவரை கொலை செய்ய முயற்சி... உட்கட்சி பூசலா... காரணம் என்ன...?

பாஜக தலைவரை கொலை செய்ய முயற்சி... உட்கட்சி பூசலா... காரணம் என்ன...?

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக  தரணி முருகேசன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாநில  தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்டார். தரணி முருகேசன் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று விட்டில் இருந்த தரணி முருகேசனை மர்ம நபர்கள் இருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்குள் நுழைந்து ஆயுதங்களை கொண்டு தாக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அவரது மேலாளர் தடுக்க முயன்றதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையொட்டி தரணி முருகேசன் கூச்சலிட்டதை கண்ட அவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பாஜகவினர் மர்ம நபர்கள் இருவரையும்  மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  முருகேசனிடம்  விசாரித்தனர்.

இதனிடையே பாஜக மாவட்ட தலைவரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரணி முருகேசனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பாஜகவினர் கேணிக்கரை நெடுஞ்சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து  காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பாஜகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்நிலையில் தரணி முருகேசன் மீது தாக்குதல் நடத்த முயன்ற இருவரையும் கைது செய்த போலீசார் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை  நடத்தியதில் இருவரும் சென்னை எண்ணூரை சேர்ந்த சுரேஷ் மற்றும் மோகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அழைத்ததால் சென்னையில் இருந்து ராமநாதபுரம் வந்தததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் விக்னேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட கட்சி நிர்வாக சீரமைப்பு காரணமாக கலைக்கப்பட்டு முன்னதாக இருந்த மாவட்ட தலைவர் கதிரவன் மாற்றப்பட்டு புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டதில் இருந்து உட்கட்சி பூசல் காரணமாக மாவட்டத்தில் பாஜகவினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் கட்சியில் நிலவும் பூசல் காரணமாக தரணி முருகேசன் மீது கூலிப்படை ஏவப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம்  அறிந்த பாஜகவினர் நள்ளிரவு முதல் முருகேசன் இல்லத்தில் கூடியுள்ளனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலிசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.