"ஓநாய்கள் ஆடுகள் போல் உடையணிந்து திரிகின்றன"  நீதிபதி காட்டம்!

"ஓநாய்கள் ஆடுகள் போல் உடையணிந்து திரிகின்றன"  நீதிபதி காட்டம்!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கருவுற்ற வழக்கில் "ஓநாய்கள் ஆடுகள் போல் உடையணிந்து திரிகின்றன" என நீதிபதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 55 வயது நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததால் அச்சிறுமி கருவுற்று உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் கருவை கலைக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் மற்றும் முதற்கட்ட இழப்பீடு வழங்க கோரி அவரது தாயார் காளியம்மாள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில்  2020 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையின் கருவை கலைக்கவும் முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. 

இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயது நபர் மீது போஸ்கோ பிரிவின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து குற்ற வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால் குற்ற வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் சிறுமிக்கு போஸ்கோ வழக்கில் வழங்கும் இழப்பீட்டினை மாவட்ட சட்ட ஆணையம் வழங்கவில்லை. இதனையடுத்து சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிறுமிக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனுதாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தந்தை வயதில் உள்ளவர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து தற்போது அந்தக் குழந்தை கருவுற்று உள்ளதாக குறிப்பிட்ட அவர், "ஓநாய்கள் ஆடுகள் போல் உடைய அணிந்து திரிகின்றது" “wolf in sheep's clothing” என விமர்சித்துள்ளார்.  
குற்றம் புரிந்தவர் இறந்துவிட்டதால் இழப்பீடு வழங்க மறுத்த சட்ட சேவை ஆணையத்தை கண்டித்த நீதிபதி, சட்ட சேவை ஆணையத்தின் நோக்கம் "பலவீனமானவர்களுக்கு இலவச மற்றும் திறமையான சட்ட சேவைகளை வழங்குவதும், பொருளாதார அல்லது பிற இயலாமை காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி மறுக்கப்பட கூடாது என்பதாகும்". ஆனால், இந்த வழக்கில் மாவட்ட சட்ட சேவை மையத்தின் சேர்மன் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய குழந்தைக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்குவதை தவிர்த்து மனுவை தள்ளுபடி செய்யக்கோரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீடு நிதி ஒதுக்கீடு அட்டவணையின் படி பாதிக்கப்பட்ட சிறுமி ரூ. 14 லட்சம் இழப்பீடு பெற தகுதியானவர் என்றும் ரூ. 14 லட்சத்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய சிறுமியின் வைப்பு நிதியில் செலுத்த வேண்டும் என்றும், இதில் இருந்து கிடைக்கும் வட்டியை சிறுமியின் தாயார் பெற்றுக் கொண்டு சிறுமியின் மறுவாழ்விற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட குழந்தை நல அதிகாரி மூன்று மாதத்திற்கு ஒரு முறை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய குழந்தையின் நிலைகுறித்த அறிக்கையை மாவட்ட சட்ட சேவை மையத்தில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பணத்தேவை இருந்தால் பணத்தை எடுக்க நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெற வேண்டும் என்றும், ரூபாய் 14 லட்சத்தை இரண்டு வாரத்திற்குள் மாவட்ட சட்ட சேவை மைய சேர்மன் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய குழந்தையின் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிக்க:இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர்; காரணம் என்ன?