கேள்விக்குறியாகிய அரசு மருத்துமனைகள்... மருத்துவர் இல்லாததால், மருத்துவம் பார்த்த தூய்மை பணியாளர்!

கேள்விக்குறியாகிய அரசு மருத்துமனைகள்... மருத்துவர் இல்லாததால், மருத்துவம் பார்த்த தூய்மை பணியாளர்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக விபத்து அவசரசிகிச்சை பிரிவில் தூய்மை பணியாளர் மருத்துவம் பார்க்கும் வீடியோ, வெளியாகி அதிர்ச்சியளித்து வருகின்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பள்ளிபாளையம், தேவூர், புளியம்பட்டி, வெப்படை, பச்சாம்பாளையம், கத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள் தோறும் 1000 க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் காலி பணியிடங்கள் நிரப்பக் கோரி அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அமைப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் இரவு நேரத்தில் அடிப்பட்டு வந்த ஒருவருக்கு மருத்துவர் இல்லாததால், மருத்துவமனை தூய்மை பணியாளர் பெண் ஒருவர், அடிபட்ட நபரின் முகத்தில் தையல் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. தொடர்ந்து அதில் மருத்துவர் இல்லை எனவும், அதனால் தான் தையல் போடுவதாகவும் கூறுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கிடையே குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகள் பெரும் அளவில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 

இதனால்  காலிபணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: நீலகிரியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு!