அரசு அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

அரசு அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்!

திருப்பூர் அருகே, பணியில் இருந்த  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரை, திமுக நிர்வாகி மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து தாக்கியதில் அதிகாரி காயமடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது,இந்த அலுவலகத்தில் வெள்ளகோவில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராக முத்து ராமலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார், இவரது கணவர் விக்னேஷ் ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அங்கன்வாடியில் குழந்தைகள் குறைவாக இருப்பதை கணக்கிட்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் இரண்டு அங்கன்வாடிகளை ஒரே இடத்தில் இணைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் குள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் குறைவாக இருப்பதால், அருகருகே இருந்த அங்கன்வாடி மையத்தை ஒன்றாக இணைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த வெள்ளகோவில் நகர திமுக முன்னாள் செயலாளர் முத்துக்குமார் என்பவர் அரசு அதிகாரியான முத்துராம லட்சுமி இடம் பத்து நிமிடத்தில் வருகை பதிவேடு எடுத்துக்கொண்டு நகராட்சி அலுவலகம் வரவேண்டும் என தெரிவித்துள்ளார். அப்படி இல்லை எனில் நாங்கள் அங்கு வருவோம் என்றும் தெரிவித்து போனில் மிரட்டல் விடும் தோணியில் பேசி உள்ளார்.

மேலும், வழக்கம் போல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த முத்துராமலட்சுமியிடம், திமுகவை சேர்ந்த முத்துக்குமார், இவர் திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர், இவரது மனைவி கனியரசி வெள்ளகோவில் நகர்மன்ற தலைவராக உள்ளார், திமுகவை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் அவரது  பத்துக்கும் மேற்பட்ட  திமுகவினர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து எவ்வாறு அங்கன்வாடி மையத்தை குறைக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முத்துராம லட்சுமியின் மாமனார் முத்து(70) என்பவர் அலுவலக வாயிலில் வெளிப்புறத்தில் நின்று கொண்டு எனது மருமகளிடம் என்ன பிரச்சனை என கேட்டபோது திமுகவை சேர்ந்த கும்பல் மாமனாரை சரமாரியாக தலையில் தாக்கியுள்ளது.

இதனை தடுக்கச் சென்ற அரசு அதிகாரி முத்துராமலட்சுமியையும் தாக்கியதில் அவரது முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் பலத்த காயமடைந்த இருவரும் வெளியே வந்துவிடக்கூடாது என கருதிய திமுகவை சேர்ந்த கும்பல், அராஜக போக்கை கையாண்டு அவர்களை அலுவலகம் உள்ளே தள்ளி, பூட்டியுள்ளனர். 

அதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்கள்,  புகார் தெரிவிக்க வெள்ளகோவில் காவல் நிலையம் சென்றபோது அங்கு புகாரை பெற்றுக் கொள்ளவில்லை எனவும், மூன்று மணி நேரத்திற்கு மேலாக யாரும் உதவ வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இவர்கள், தங்களது உறவினர்களை போனில் அழைத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு காங்கேயம் அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இருவரும் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு அதிகாரியான முத்துராம லட்சுமி கூறுகையில், 

குள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையம் மூடியதால் ஆத்திரமடைந்த திமுகவை சேர்ந்த வெள்ளகோவில் நகர்மன்ற தலைவரின் கணவர் முத்துக்குமார் போனில் வருகை பதிவேடு 10 நிமிடத்திற்கு தர வேண்டும் இல்லையெனில் அலுவலகத்திற்கு வருவதாகவும் தெரிவித்தனர், அதேபோல் அலுவலகத்திற்கு வந்த திமுகவினர்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் எதற்காக இந்த அங்கன்வாடி மையத்தை மூடினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த மையத்தில் குழந்தைகள் குறைவாக இருப்பதால் மையத்தை மூடுவதற்கு  பரிந்துரைத்துள்ளேன்  என தெரிவித்த போது, வருகை பதிவேடு காட்டுங்கள் என கோபத்துடன் தகாத வார்த்தைகளை பேசியதை அடுத்து மாமனாரையும் தன்னையும் திமுகவினர்கள் மிகக் கடுமையாக தாக்கினார்கள்.

அங்கிருந்து வெளியே வர முயன்ற போது எங்களை கீழே தள்ளிவிட்டு அராஜக செயலில் ஈடுபட்டனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியும் தங்களை போலீசார் அனுமதிக்கவில்லை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வற்புறுத்தினார்கள். நாங்கள் இருவரும் அருகிலுள்ள வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றோம், தங்களை தாக்கிய திமுகவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயமடைந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்த வெள்ளகோவில் நகர முன்னாள் செயலாளர்,நகர் மன்ற தலைவரின் கணவர் முத்துக்குமார்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் அத்துமீறி அரசு அதிகாரியை தாக்கி, மூன்று மணி நேரம் அலுவலகத்தில் பூட்டி வைத்த சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க || "சுத்தமான தண்ணீரை குடிப்பது இனி ராக்கெட் அறிவியல் அல்ல", விஞ்ஞானி நம்பி நாராயணன்!