எல்லை தாண்டி போதை மாத்திரைகள் விற்பனை... நண்பனை கொலை செய்த நண்பன்!

எல்லை தாண்டி போதை மாத்திரைகள் விற்பனை செய்ததால் நண்பரை கொலை செய்து கடலில் வீசியதாக, கடலில் கரை ஒதுங்கிய பட்டதாரி வாலிபர் கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எல்லை தாண்டி போதை மாத்திரைகள் விற்பனை... நண்பனை கொலை செய்த நண்பன்!

சென்னை பசுமைவழிச்சாலை அறிஞர் அண்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்வரன்(23). பட்டதாரியான மகேஷ்வரன் பணிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்தார். இதனால் மகேஷ்வரனின் தாய் பஞ்சவர்ணம் பல முறை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி மகேஷ்வரன் உணவு அருந்தியபின் வீட்டின் மேல் அறையில் உறங்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றார். காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்து வராததால் பஞ்சவர்ணம் சென்று பார்த்த போது மகேஷ்வரன் இல்லாததால் உறவினர், நண்பர்கள் என அனைவரது வீட்டினில் தேடியும் மகேஷ்வரனை காணவில்லை.

இதனால் அச்சமடைந்த பஞ்சவர்ணம் உடனே தனது மகன் காணவில்லை என  அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கிடையில் இன்று காலை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை மணற்பரப்பில் வாலிபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததால் சம்பவ இடத்திற்கு வந்து கரை ஒதுங்கிய பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் காணாமல் போன வாலிபர்களின் பட்டியலை வைத்து  போலீசார் சடலத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது அதில் அபிராமபுரத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மகேஷ்வரனுடன் அங்க அடையாளங்கள் ஒத்துப் போகவே மகேஷ்வரனின் தாய் பஞ்சவர்ணத்தை நேரில் அழைத்து பிரேதத்தை காண்பித்தபோது உடையை வைத்து தனது மகன்தான் என அவர் அடையாளம் காட்டினார்.  

இதற்கிடையே ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக்(24) என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் வந்து அபிராமபுரத்தில் மகேஷ்வரனை கொலை செய்து கடலில் வீசியதாகவும், சரணடைய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கறிஞர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ள, அதையறிந்த கார்த்திக் தப்பியோடியுள்ளார்.

இதனால் அபிராமபுரம் போலீசார் உடனே தனிப்படை அமைத்து தப்பியோடிய கார்த்திக்கை தேடி வந்தனர். அப்போது செம்மெஞ்சேரியில் கார்த்திக் பதுங்கி இருப்பதை கண்டறிந்து அங்கு சென்று கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக மேடவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(19) , ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த விக்கி(24), மயிலாப்பூரைச் சேர்ந்த தர்மா(23) ஆகிய 3 பேர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக கார்த்திக், மணிகண்டன், விக்கி  தர்மா, சதீஷ், சூர்யா ஆகியோர் மகேஷ்வரனுடன் நண்பர்களாக இருந்து வந்ததுடன் அனைவரும் சென்னை முழுவதும் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளதும், இவர்கள் ஆறு பேரும் பகுதி வாரியாக பிரித்து  போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

மேலும், மகேஷ்வரனுக்கு மேடவாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் அவர் மயிலாப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு வந்து போதை மாத்திரைகள் விற்று வந்ததால் ஏரியா விட்டு மற்ற ஏரியாவிற்கு வந்து விற்பனையில் ஈடுபட வேண்டாம் என மகேஷ்வரனை கார்த்திக் உட்பட ஐந்து பேரும் கண்டித்துள்ளனர் என்பதையும், இதை மீறியும் மகேஷ்வரன் மற்ற ஏரியாவிற்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக் மகேஷ்வரனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டிதையும் போலீசார் விசாரித்து அறிந்தனர். இதைத் தொடர்ந்தே கடந்த 4 ஆம் தேதி கஞ்சா அடிப்பதற்காக கூவம் ஆற்றங்கரையோரம் வருமாறு செல்போனில் மகேஷ்வரனை அழைத்து பின்னர் ஆற்றங்கரை ஓரமாக அமர்ந்து மகேஷ்வரன், கார்த்திக் உட்பட 7 பேரும் கஞ்சா அடித்து கொண்டிருந்தபோது திடீரென கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேஷ்வரனை வெட்டியுள்ளார். காயமடைந்த மகேஷ்வரனிடம் பல முறை கூறியும் எல்லை மீறி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதால்தான் உனக்கு இந்த தண்டனை எனக் கூறி மேலும் வெட்டச் சென்றபோது மகேஷ்வரன் விற்பனையில் ஈடுபடவில்லை என தெரிவித்ததால், மகேஷ்வரனை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவரின் அறையை சோதனை செய்தபோது போதை மாத்திரைகள்  இருந்ததால் கோபம் தலைக்கேறி மீண்டும் மகேஷ்வரனை கூவம் ஆற்றங்கரையோரம் அழைத்துச் சென்று  சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அவரை கூவம் ஆற்றில் வீசி சென்றுள்ளனர். மேலும், மகேஷ்வரனை கொல்ல பயன்படுத்திய கத்தி மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்களையும் கூவத்தில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இவை அனைத்தையும் விசாரணை மூலம் அறிந்த போலீசார் நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவாக இருந்துவரும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் மீது ஏற்கனவே அடிதடி, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக 5 வழக்குகள்  அபிராமபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.