மாணவியிடம் சில்மிஷம் ஆர்.பி.எப் சஸ்பெண்ட்

மாணவியிடம் சில்மிஷம் ஆர்.பி.எப் சஸ்பெண்ட்

தாம்பரம் ரயில் நிலைய சுரங்கபாதை அருகே சட்டக் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தாம்பரம் ரயில் நிலைய சுரங்கபாதை அருகே தனியாக நின்று கொண்டிருந்த சட்ட கல்லூரி மாணவியிடம்  அங்கு மது போதையில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது சட்டக் கல்லூரி மாணவி இது தொடர்பாக செல்போனில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மது போதையில் இருந்த சீனிவாஸ்  நாயக்கை தட்டிக் கேட்டுள்ளார். இதற்கு தான் ஒரு காவல் அதிகாரி என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் சீனிவாஸ்  நாயக். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் தாக்கியதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு ஒரு விரல் முறிந்தது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து சென்னை ரயில்வே கொட்ட ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவிட்டுள்ளார். குடிபோதையில் சட்டக் கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டுதான் ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.