தவணை கட்டததால், குழந்தையை கடத்திய முத்தூட் நிதி நிறுவன ஊழியர்!

தவணை கட்டததால், குழந்தையை கடத்திய முத்தூட் நிதி நிறுவன ஊழியர்!

புதுக்கோட்டையில், தவணை கட்ட தவறிய நபரின் குழந்தையை கடத்தி சென்றுள்ளார், முத்தூட் நிதி நிறுவனத்தின் ஊழியர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மருதூரைச் சேர்ந்தவர் வனத்து ராஜா. கூலி வேலை செய்து வரும் இவர் கீரனூரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். 

இந்த கடன் தொகைக்கு மாதா மாதம் 2500 ரூபாயை தவணை முறையில் கட்டி வந்துள்ளார் வனத்து ராஜா. திடீரென வருமானம் இன்றி அன்றாட வாழ்க்கையையே நடத்த முடியாதவர், கடன் தொகையை கட்டாமல் நிலுவையிலேயே வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், முத்தூட் நிதி நிறுவன ஊழியரான விக்னேஷ் என்பவர் தவணைத் தொகையை கேட்டு அடிக்கடி வனத்து ராஜாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பணத்தை பின்னர் தருவதாய் கூறியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ், மீண்டுமொரு முறை பணம் வசூலிக்க சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த 11 வயது சிறுமி ஜனனி, தனது தந்தை வெளியே சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜனனியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற விக்னேஷ், வனத்து ராஜாவுக்கு போன் செய்து மாதத் தவணையை கட்டினால்தான் மகளை விடுவிக்க முடியும் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வனத்து ராஜா, கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கை கையில் எடுத்த போலீசார் விக்னேஷை கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளர் தன் இயலாமையை ஒப்புக் கொள்ளும் போது, அவருக்கு அபராதம் விதிக்கலாம். ஆனால், வாடிக்கையாளர்களின் உடைமைகளை பறிப்பதே குற்றமாக கருதப்படும் நிலையில், சிறுமியை பிணையமாக அழைத்து வருவது மிகவும் கொடுஞ்செயலாக கருதப்படுகிறது.

தற்போதெல்லாம், நிதி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இரக்கமற்ற மனதோடு செயல்பட்டு வருவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க || ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுத்தம்!!