ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஆளுநர் மாளிகையின் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மாநிலத்தின் உண்மையான சட்டம் - ஒழுங்கைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுகவினர் மும்முரமாக இருப்பதால் குற்றவாளிகள் தெருக்களில் நடமாடுவதாக சாடி உள்ளார். மேலும், ஆளுநர் மாளிகை மீதான தாக்குதல் மற்றும் கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் மீதான தாக்குதல்களுக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.  

இதேபோல் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு திமுக ஆட்சியில் சீரழிந்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.