நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வருக்கு மிரட்டல்; இந்து அமைப்பினர் கைது!

நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வருக்கு  மிரட்டல்; இந்து அமைப்பினர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்த இந்து அமைப்பை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ. பேராயத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் காரில் உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுசீலா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வடசேரி போலீசார் குழித்துறை சேர்ந்த இந்து சேனா மாவட்ட தலைவர் பிரதீப் குமார் என்ற மணிகண்டன் (40), சிதறாலை சேர்ந்த பிரதீஸ் (36), பாகோடு கழுவன்திட்டையை சேர்ந்த மூர்த்தி (50) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 448, 294 பி, 384, 506 (2) ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பிரதிசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம்; சீமான் கைது செய்யப்படுவாரா?