“காய்கறி கமிஷன் மண்டியில் கூடுதல் சுங்க கட்டணம்” - குற்றம் சாட்டும் விவசாயிகள்..!

“காய்கறி கமிஷன் மண்டியில் கூடுதல் சுங்க கட்டணம்” - குற்றம் சாட்டும் விவசாயிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டர் இட்டேரி ரோடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது.  30க்கும் மேற்பட்ட காய்கறி கமிஷன் கடைகள் செயல்பட்டு வரும் கமிஷன் மண்டிக்கு பழனி மற்றும் தொப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். காய்கறி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களுக்கும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்து பொருட்களை ஏற்றிச்செல்லும்  வியாபாரிகளின் வாகனங்களுக்கும் சுங்கம் வசூலித்துக்கொள்ள நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பழனி நகராட்சி காய்கறி சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக அதிககட்டணம் வசூலிப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் கடை வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள், நகராட்சி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்படும் தக்காளி மற்றும் இதர விளைபொருட்களுக்கு மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் சுங்கம் வசூலித்துக் கொள்ள நகராட்சி அனுமதித்துள்ளது. அதேபோல விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளியே கொண்டுசெல்லும் சரக்குவாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ளவும் நகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் நகராட்சி சந்தையை ஏலம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், விவசாயிகளின் பொருட்களுக்கு சுங்கம் வசூலிப்பது மட்டுமின்றி பொருட்களை ஏற்றிக்கொண்டு  சந்தைக்கு வரும் வாகனங்களுக்கும் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கின்றனர். 

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சுங்க கட்டணம் தொடர்பான பிரச்சனைகளால் பழனியில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பலரும் பழனி காய்கறி சந்தையை விட்டு வெளியேறியுள்ள நிலையில்,  மீண்டும் இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் பழனிக்கு வராமல் ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமலை ஆகிய ஊர்களில் உள்ள சந்தைக்கு செல்கின்றனர். இதனால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி வசூல் செய்யும் ஒப்பந்ததாரரை கட்டுப்படுத்தாவிட்டால் வியாபாரிகள் அனைவரும்  காலவரையின்றி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். 

இதையும் படிக்க : ”காவல்துறை சார்பில் தயார் நிலையில் உள்ள மீட்பு படையினர்...” - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்