ஒரே பள்ளி வாகனத்தால் ஏற்பட்ட விபத்து...! நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்...!

ஒரே பள்ளி வாகனத்தால் ஏற்பட்ட விபத்து...! நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்...!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில், ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள், வழக்கம் போல் இன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு விருத்தாச்சலத்தில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு வேனும், சென்று கொண்டிருந்தது. அப்போது,  ஓட்டுநர்கள் ஒருவருகொருவர் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர். இந்நிலையில் கோ. ஆதனூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது,  பள்ளி வாகனம் திடீரென  விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. 

பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததும்,  வாகனத்தில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக பள்ளி வாகனத்தில் சிக்கிக் கொண்டிருந்த மாணவர்களை மீட்டு, விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அக்கிராம மக்கள் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, விருத்தாச்சலம் - சிதம்பரம் சாலையில் மரக்கட்டைகளை நடுரோட்டில் போட்டு , மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த போராட்டத்தின் போது இந்த தனியார் பள்ளி வாகனங்கள்,  நாள்தோறுமே அதிவேகமாக செல்வதாகவும், மாணவர்கள் மீது எவ்வித அக்கறையும் கொள்ளாமல் வாகன ஓட்டுநர்கள் அலட்சியமாக செயல்படுவதாகவும், வாகன ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு செல்வதாகவும்  கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதாச்சலம் காவல்துறையினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் வரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக் கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர்  கூறியதால் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.