காயமடைந்த பாகுபலி; சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் தீவிரம்!

காயமடைந்த பாகுபலி; சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் தீவிரம்!

கும்கி யானைகளின் உதவியோடு வாய் பகுதியில்  காயமடைந்துள்ள  பாகுபலி யானைக்கு  மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்ற ஒற்றை யானை சுற்றித் திரிந்து வருகிறது. பெரும்பாலும் அடர்ந்த காட்டிற்குள் செல்லாமல் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே திரிவது. அவ்வப்போது விவசாய பயிர்களை உண்பது என சேட்டை செய்து வரும் இந்த யானை அரிக்கொம்பனை போல ஆக்ரோஷமான யானை அல்ல. ஒற்றை யானையாக சுற்றினாலும் இதுவரையும் எந்த மனிதர்களையும் தாக்கியது இல்லை. இதனால் இதனை பாகுபலி என செல்லப் பெயர் வைத்து மக்கள் அழைத்து வந்தனர்.மீண்டும் ஊருக்குள் பாகுபலி - அச்சத்தில் மக்கள்!-the bagupali elephant left  the forest a year later and entered the city - HT Tamil

இந்த காட்டு யானையின் வாய் பகுதியில் தற்போது பலத்த காயம் ஏற்பட்டு அதனுடன் சுற்றித்திரிவது  வனத்துறையினரால்  கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சையளிக்க வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் காயத்திற்கு பிற யானையுடன் மோதல் காரணமா அல்லது  சட்டவிரோதமாக  காட்டு பன்றியை வேட்டையாடி கொல்ல பயன்படுத்தப்படும்  நாட்டு வெடிகுண்டு காரணமா என்பது தெரியவில்லை. மருத்துவர்கள் சோதனை செய்த பிறகே காயத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும் என கூறப்படுகிறது.

சிகிச்சை அளிப்பதற்காக காயமடைந்த  பாகுபலி யானையின் நடமாட்டத்தை கடந்த இரு நாட்களாக வனத்துறையினர் கண்காணித்து வந்தாலும் பாகுபலி ஓரிடத்தில் நில்லாமல் தொடர்ந்து நகர்ந்தபடி இடம் மாறி கொண்டே இருப்பதால் அதன் இருப்பிடத்தை முடிவு செய்வதில் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த பாகுபலி யானையை சுற்றி வளைத்து ஓரிடத்தில் நிறுத்தி அதற்கு மயக்க ஊசி செலுத்த உதவிக்காக தற்போது முதுமலை முகாமில் இருந்து அசீம் மற்றும் விஜய் என இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

வனத்துறையின் பிரத்யேக லாரியில் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ள கும்கி யானைகள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், நீண்ட தந்தங்களுடன் பிரமாண்ட உருவம் கொண்ட பாகுபலி யானையை கும்கி யானைகள் சுற்றி வளைப்பது என்பது சவாலான காரியமாகவே இருக்கும்.

முதலில்  மயக்க ஊசி செலுத்த வசதியாக பாகுபலி யானையை சமவெளி பகுதிக்கு வரவழைப்பது அவசியம் என்பதால் அதற்கான முதற்கட்ட பணியை வனத்துறை குழுவினர் தொடங்கியுள்ளனர். ஆறு தனித்தனி குழுக்கள் பாகுபலி யானையை பின் தொடர்ந்து சென்று அதனை சரியான பகுதிக்கு விரட்டி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் அடுத்தகட்டமாக காட்டு யானையான பாகுபலிக்கு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தவும், பின்னர் யானை அரை மயக்கத்தில் இருக்கும் போது அதனை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு கொண்டு செல்லவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக வனத்துறை மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:குழந்தைகள் முதல் பெண்கள் வரை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை! ஆந்திர போலீஸின் அட்டூழியம்! நீதி கிடைக்குமா?