ஒரு மாதமாக நீரில் மூழ்கிய வாழை மரங்கள்...
தொடர் மழை காரணமாக ஒரு மாதம் வரை வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சிவகங்கை : திருப்புவனம் அருகே ஒரு மாத காலமாக வாழை மரங்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் தவித்து வருகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் நயினார்பேட்டை, வெள்ளக்கரை, கலியாந்தூர், மாரநாடு, கானூர், திருப்பாச்சேத்தி உள்ளிட்டட பகுதிகளில் வாழை பெருமளவு பயிரிடப்படுகிறது.
ஒட்டு வாழை, நாட்டு வாழை, முப்பட்டை, பச்சை வாழை உள்ளிட்டவைகள் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள் முகூர்த்த நாளை கணக்கிட்டு வாழை பயிரிடுகின்றனர். தற்போது தை பொங்கல் திருநாளை கணக்கிட்டு பயிரிடப்பட்ட வாழை சமீபத்திய மழையால் நீரில் மூழ்கியுள்ளது. திருப்புவனம் கண்மாயில் இருந்து வெள்ளக்கரை, நயினார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு 4ம் மடை மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கரைப்பாலத்தை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்...
கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த வாய்க்காலில் கரை பகுதி சுமார் 10 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் அருகில் உள்ள வாழை, தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து விட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் இன்று வரை உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாழைத்தோப்புகளில் தேங்கிய தண்ணீர் வடிவதற்கு வெள்ள வாய்க்கால் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக கடும் வறட்சி காரணமாக பலரும் விவசாயம் செய்யாததால் கால்வாய்கள் அனைத்தும் மண் மேடாக மாறிவிட்டது. தண்ணீர் வெளியேற வழியில்லாததால் ஒரு மாதமாக வாழை தோப்பில் தண்ணீர் நிற்பதால் மரங்கள் அழுகி வருகின்றன.
மேலும் படிக்க | வெள்ளத்தில் மூழ்கும் சிதம்பரம்... வாய்க்கால் கரைகளை உயர்த்த கோரிக்கை...
ஏக்கருக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை காப்பீடு செய்வதில்லை. அதிகாரிகள் உரிய இழப்பீடு பெற்று தருவதில்லை என்பதால் விவசாயிகளும் காப்பீடு செய்வதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். நயினார்பேட்டை பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிதான் வாழை பயிரிட்டுள்ளனர். வாழை மரங்கள் அழுகி வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற அவசரம் கருதி வெள்ள கால்வாய்களை தூர் வாரினால் தண்ணிர் வடிய தொடங்கி விடும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | 122 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் சின்னாபின்னமாகிய சீர்காழி...!