ஸ்ரீபெரும்புதூரில் கல்குவாரியை மூடக் கோரி முற்றுகை போராட்டம்!

ஸ்ரீபெரும்புதூரில் கல்குவாரியை மூடக் கோரி முற்றுகை போராட்டம்!

மாம்பாக்கம் அருகே செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக் கோரி அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில்  JKRC  என்ற கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு 700 மீட்டர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கல்குவாரியில் போடப்படும் வெடிக்குண்டுகளால் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிர்வு ஏற்படுவதாக அக்குடியிருப்பில் தங்கி வரும் மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்குவாரியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அக்குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் இன்று கல்குவாரியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறையினர் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல்குவாரியை மூடுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் குடியிருப்பு வாசிகள் கலைந்து சென்றனர்.

மேலும், கல்குவாரியை விரைவில் மூடாவிட்டால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அனைவரும் கலந்து கொண்டு பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்

இதையும் படிக்க:"பத்திரப்பதிவுக்கு லஞ்சம் தரத் தேவையில்லை” அமைச்சர் மூர்த்தி!