சென்னை மாநகராட்சியில் வாக்காளர்கள் எண்ணிக்கை...?

சென்னை மாநகராட்சியில் வாக்காளர்கள் எண்ணிக்கை...?

சென்னை மாநகராட்சியின் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்டத்தில் 3,723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அது வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் எண்ணிக்கையானது துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1,70,125 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,07,831 வாக்காளர்களும் உள்ளனர். இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 19,09,512 ஆண் வாக்காளர்களும்,
19,71,653 பெண் வாக்காளர்களும், 1,112 மூன்றாம் பாலினத்தவர் என 38,82, 277 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் 25,980 ஆண் வாக்காளர்களும், 28,295 பெண் வாக்காளர்களும், 72 மூன்றாம் பாலினத்தவர் என 54,347 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் 32,079 ஆண் வாக்காளர்களும், 32,430 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவர் என 64,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல்கள் குறித்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் 
 www. elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதையும் படிக்க : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் ...!