சிதம்பரம் : நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா...! தொடங்கிய தேரோட்டம்...!

சிதம்பரம் : நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா...! தொடங்கிய தேரோட்டம்...!

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் நடைபெறும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சனமும் இக்கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறும். மூலவரான நடராஜர் உற்சவரராக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த திருவிழாக்களுக்காக உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் வருவது வழக்கம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. நாள்தோறும் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா, பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது. மாட வீதிகளின் வழியே வீதி உலா வரும் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்ததருளி அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை மாலை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் நடராஜர் கோயில் மற்றும் மாடவிதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இதையும் படிக்க : சாலையில் நின்றிருந்தவரை தாக்கிய நபர்...! வெளியான சிசிடிவி...!