மண்ணால் மூடப்பட்ட, 20,000 ஆண்டுகள் பழமையான 4 குகைகள் கண்டுபிடிப்பு!

மண்ணால் மூடப்பட்ட, 20,000 ஆண்டுகள் பழமையான 4 குகைகள் கண்டுபிடிப்பு!

திருமயம் கோட்டை அமைந்துள்ள மலை பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 4 குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அமைந்துள்ள மலை பகுதியை புதுக்கோட்டை அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநரும், புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவருமான ராஜா முகமது தலைமையில் மத்திய தொல்லியல் உதவி அலுவலர் முத்துக்குமார், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கருணாகரன் ஆகியோர் அண்மையில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு 4 பழங்காலக் குகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து ராஜா முகமது கூறுகையில், மலைகளிலும், குன்றுகளிலும் இயற்கையாக அமைந்த குடவறைகள், குகைகளை கற்கால மனிதர்கள் வாழ்விடங்களாக பயன்படுத்தி வந்தனர். தற்போது திருமயத்தில் உள்ள மலையில் இந்த குகைகள் அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் மேல் பகுதியில்தான் கி.பி. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையும், கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன், விஷ்ணு குடவறைக் கோயில்களும் உள்ளன. மலையின் தெற்கு சரிவுப் பகுதியில் பல்வேறு அளவுகளில் 4 குகைகள் உள்ளன.

அதில், மேற்கு திசையில் இருந்து முதலில் அமைந்துள்ள குகையானது சிவன் கோயிலின் தீர்த்தக் குளத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதன் முகப்பில் இருந்து உள்பகுதி வரை மண்ணால் நிரப்பப்பட்டுள்ளதால் முழுமையாக அறிய முடியவில்லை . மேலும், மழை நீர் உள்ளே வராமல் இருக்க மேல் முகட்டில் பள்ளமாக (தாறை) வெட்டப்பட்டுள்ளது. 2-வதாக உள்ள குகையானது சுமார் 5 அடி உயரத்தில் உள்ளது. இதில், சிலர் அமரக்கூடிய வகையில் உள்ளது. இதன் கூரைப் பகுதியில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பெரும்பாலான ஓவியங்கள் அழிந்து காணப்பட்டாலும், மனித உருவ ஓவியங்களும், கை அச்சும் அழியாமல் உள்ளன. இந்த ஓவியங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையான ஓவியங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ளன.

3, 4-வது குகைகள் சற்று உயரத்தில் உள்ளன. இரு குகைகளின் வாயில்களும் சுவரால் மறைக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகைகள் அனைத்தும் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். மேலும், மலையைச் சுற்றி ஆய்வு செய்ததில் சிறிய குகைகள் பல இடங்களில் இருந்து அழிக்கப்பட்டற்தான எச்சங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, விஷ்ணு கோயில் அமைந்துள்ள குடவறையானது இயற்கை குகையாக இருந்துள்ளது. பின்னாளில், சிற்பங்களுடன் கூடிய கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.

குகைகளின் எச்சங்களைக் கண்டறிவது குறித்தும், மூடப்பட்டுள்ள குகைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற குகைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, அம்மாசத்திரம், குடுமியான்மலை, தேனிமலை, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலும் உள்ளன என்றார்.

இதையும் படிக்க:"பாஜகவினர் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல முற்படுகிறார்கள்" ஹைதர் அலி குற்றச்சாட்டு!