பணிக்கு வராத மருத்துவர்கள்...! வருகை பதிவில் கையொப்பம்..! நோயாளிகள் அவதி..!

பணிக்கு வராத மருத்துவர்கள்...! வருகை பதிவில் கையொப்பம்..!  நோயாளிகள் அவதி..!

சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருந்த நிலையில் பணி மருத்துவர்கள் பணியில் இல்லாததால்  நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள் அவதியடைந்தனர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு பொது  மருத்துவமனைக்கு சங்கரன்கோவில் மட்டுமண்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும்  சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருந்தனர். அரசு வருகை பதிவேட்டின்படி, பணி மருத்துவர்கள் 10 பேர் உள்ள நிலையில் ஒருசிலர் மட்டுமே மருத்துவர் அறையில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் மருத்துவர்கள் அறை வெறிச்சோடிக் காணப்பட்டது. 

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வெகு நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பெரும்பாலான நேரங்களில் வருகை பதிவேட்டில் மட்டுமே மருத்துவர்களின் கையொப்பம் உள்ளதாகவும் ஆனால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அவர்கள் வருவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதையும் படிக்க : வாழைத் தோட்டத்தை துவம்சம் செய்த யானைக் கூட்டம்...!