போட்டிப் போட்டு வாழைத்தாரைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விவசாயிகள்...

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வாழைக்காய் சந்தையில் 30,000 மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

போட்டிப் போட்டு வாழைத்தாரைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விவசாயிகள்...

நெல்லை | வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் வாழைக்காய் சந்தை உள்ளது. வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் இயங்கும். இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வாழைத்தார்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் எடுத்து வருவார்கள்.

இங்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களை கொள்முதல் செய்வதற்காக நெல்லை, அம்பை, கடையநல்லூர், சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, நாகர்கோவில் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும், கேரளாவிலிருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். சந்தை நடைபெறும் நாட்களில் அப்பகுதியில் விவசாயிகளும், வியாபாரிகளும் கூடுவதால் திருவிழா போன்று காட்சியளிக்கும்.

மேலும் படிக்க | ஆட்டு சந்தையில் ரூ.45 லட்சம் வரை வர்த்தகம்...

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடந்த சிறப்பு சந்தையில் விற்பனைக்காக ஏராளமான கதலி, நாடு, சக்கை, ரசக்கதலி, செவ்வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட பல்வேறு ரக வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

30,000ற்கும் மேற்ப்பட்ட வாழைத்தார்கள் குவிந்திருந்தன. அதனை கொள்முதல் செய்வதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். பொங்கல் பண்டிகையில் வாழைப்பழங்களின் முக்கியத்துவத்தினால் வாழைத்தார் விற்பனை மற்ற நாட்களைவிட அமோகமாக நடந்தது.

மேலும் படிக்க | இனி 5 அடி கரும்புகளையும் கொள்முதல்...அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

அதன்படி 100 காய்கள் கொண்ட வாழைத்தார்களான நாடு 400 ரூபாய்க்கும், தொழுவன் 500 ரூபாய்க்கும்,  செவ்வாழை 900 ரூபாய்க்கும், சக்கை 450 ரூபாய்க்கும், ரசக்கதலி 250 ரூபாய்க்கும், கதலி 200 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி 300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

கடந்த சில மாதங்களாக வாழைத்தார்களின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி வாழைத்தார்களின் விலை உயர்வினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | பெட்ரோலில் லிட்டருக்கு 10 ரூபாய் லாபம் கிடைத்தும் விலையை குறைக்க மறுப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி!