ஏழை மாணவியின் மருத்துவ கனவு... அரசு உதவிக்கரம் நீட்டுமா...?

ஆடு மேய்க்கும் மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், அவரது மருத்துவ கனவிற்கு நிதி வசதியின்றி தவித்து வருகிறார். இவரது சாதனைகள் என்னென்னவென்று பார்க்கலாம்...

ஏழை மாணவியின் மருத்துவ கனவு... அரசு உதவிக்கரம் நீட்டுமா...?

பொதுவாக, பிள்ளைகள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் "நீ எல்லாம் ஆடு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று  பெற்றோர் திட்டுவது வழக்கம். ஆனால் ஆடு மேய்க்கும்  மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்-இந்திராணி தம்பதியரின் மகள் பட்டீஸ்வரி. மடத்துக்குளம் அரசு பள்ளியில் பயின்று வந்த இவருக்கு மருத்துவராக வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு. 

மேலும் படிக்க | ஆளுநர் விவகாரம்..! இந்த சுதந்திரம் கூட இல்லையா? என்ன சொல்கிறார் தமிழிசை..!

குக்கிராமத்தை சேர்ந்த இவர்கள் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே கிடைக்கும் நேரத்தில் படித்து, தனது கனவுவை நனவாக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார். 

முதல் முயற்சியில், 104 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த நிலையில், "ஆடு மேய்க்கும் நீயெல்லாம் மருத்துவராக முடியுமா" என்ற ஏச்சுக்களும், பேச்சுக்களும் அவரை அம்பாய்த் துளைத்துள்ளது. இதற்கெல்லாம் மனம் தளராமல், அந்த அம்புகளைப் பிடித்தே தனது கனவே நோக்கி உயர்ந்தார் பட்டீஸ்வரி.

மேலும் படிக்க | சென்னை : கல்விச் சுற்றுலாவை என்ஜாய் செய்து வரும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்...!

இரண்டாவது முயற்சியில், 117 மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றார் பட்டீஸ்வரி. நீட் தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு, இட ஒதுக்கீட்டின் மூலம், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், இடம் கிடைத்துள்ளது. 

தனது கனவை எட்டிப்பிடித்த சந்தோஷத்தில் பட்டீஸ்வரி மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. 
ஆனால் வறுமை காரணமாக, சென்னை செல்வதற்கு கூட பொருளாதார வசதி இல்லாததால், தனது மருத்துவர் கனவை நனவாக்க அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பட்டீஸ்வரி. 

மேலும் படிக்க | அரசு பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா...! மதுபானக்கடையை அகற்ற கோரி போராட்டம்...!

தங்களின் சக்திக்கு மீறி செலவு செய்து மகளை நீட் தேர்வு எழுத வைத்த பெற்றோர்,  இனியும் செலவு செய்ய வழியின்றி கண்கலங்கி நிற்கின்றனர்.

ஆடு மேய்க்கும் இந்த மாணவியின் கனவை நனவாக்க அரசு உதவ முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

அரசு உதவிக்கரம் நீட்டுமா... பொறுத்திருந்து பார்ப்போம்... 

மாலை முரசு செய்திகளுக்காக உடுமலை செய்தியாளர் மணிவேல்...

மேலும் படிக்க | சென்னையில் தலை சிறந்த பள்ளி வளாகத்தில் மழை நீர் தேக்கம், மின் கசிவு..!