" ஆசிரம காப்பகத்திற்கு சீல்..." சமூக நலத்துறை அமைச்சர் உத்தரவு

திருப்பூர் காப்பகத்தில் அமைச்சர்கள் ஆய்வு

" ஆசிரம காப்பகத்திற்கு சீல்..."  சமூக நலத்துறை அமைச்சர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள  விவேகானந்தா சேவாலயா என்கிற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் 20 க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அவர்களுக்கு  ரசம் சாதம் வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். அதோடு ஆசிரமத்தில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளையும் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் காப்பகத்தை அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசு சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும் என கூறிய அவர், காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.