'ரயிலில் தொழில்நுட்ப கோளாறு' புறநகர் ரயில் சேவை பாதிப்பு...!!

'ரயிலில் தொழில்நுட்ப கோளாறு' புறநகர் ரயில் சேவை பாதிப்பு...!!

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆய்வு செய்த ரயில்வே ஊழியர்கள் வேகத்தை குறைத்து பாதுகாப்புடன் மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி பழுது சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்கத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

காலை நேரத்தில் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் அலுவலகம் செல்வோர் அவதியடைந்தனர். தொடர்ந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ரயில்வே ஊழியர்களால் சரிசெய்யப்பட்டு சுமார் 2மணி நேர தாமத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4வழிப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இதுபோன்று ரயில் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

இதையும் படிக்க:உரிய அனுமதி இன்றி நீர்த்தேக்கம்...! ஆந்திர அரசுக்கு 100 கோடி அபராதம்...!!