உண்டியல் பணத்தை எடுக்க அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு!

உண்டியல் பணத்தை எடுக்க அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  ஓசூர் அம்மன் திருக்கோயிலில் உண்டியல் பணத்தை எடுத்துச் செல்ல வந்த இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் பெருமாநல்லூர் கிராமத்தில் புகழ்பெற்ற ஓசூர் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது, இந்த திருக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தற்பொழுது உள்ளது.

இந்த திருக்கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் ரூபாய் 12 லட்சம் செலவு செய்து புனரமைப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளை செய்துள்ளனர். இந்த பணிகள் செய்வதற்கு இந்து அறநிலை துறை அதிகாரிகளுக்கு முறைப்படி கடிதம் வைத்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த 12 லட்சத்தை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திருப்பி தரவில்லை என்று கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.  இந்நிலையில் ஓசூர் அம்மன் திருக்கோயிலில் உண்டியல் பணம் எடுத்துச் செல்ல திருவள்ளூர் மாவட்ட இந்து அறநிலைத்துறை ஆய்வர்கள் கலைவாணன் மற்றும் உஷா ஆகியோர்கள் வந்திருந்தனர். மேலும்  உண்டியல் பணம் எடுத்துச் செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து பாதுகாப்புக்கு போலீசாரையும் அழைத்து வந்திருந்தனர்.

ஆனால் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள்,  பெண்கள் கோயில் முன்பு திரண்டு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது.  திருக்கோவிலுக்கு புனரமைப்பு செய்ய செலவிடப்பட்ட 12 லட்சம் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இந்த பேச்சுவார்த்தையில் காவல்துறை முன்னிலையில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 5 மணி நேரம் கிராம மக்களுடன் ஈடுபட்ட இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் உண்டியல் பணம் எடுக்க வந்த இந்து அறநிலை துறை அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பி சென்றனர். இதனால் இந்த கிராமத்தில் 5 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்... வயலில் கிடைத்த வைரம்!!