பெயர் புறக்கணிக்கப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட துணை மேயர்...!!

பெயர் புறக்கணிக்கப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட துணை மேயர்...!!

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபடுவார்கள்.  ஆனால் துணை மேயர் ஒருவர், தனது பெயர் புறக்கணிக்கப்படுவதாக புகார் கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன், மதுரை மாநகராட்சியின் துணை மேயராக பொறுப்பு வகித்து வருகிறார்.  இவர், மதுரை மாநகராட்சி சார்பில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் தனது பெயர் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாக புகார் கூறி வருகிறார்.  இந்நிலையில், மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின பவள விழா கல்வெட்டு அமைக்கப்பட்டது.  இதில், மேயர், கமிஷனர், மண்டல தலைவர் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் துணை மேயரின் பெயர் இடம் பெறவில்லை. 

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கு வந்த துணை மேயர் நாகராஜன், கல்வெட்டில் தனது பெயர் இடம் பெறாததைக் கண்டு, கோபம் அடைந்து, கொளுத்தும் வெயிலில், கல்வெட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.  இதற்கு முன் மேற்கு மண்டலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டிலும் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும், திட்டமிட்டே, தன்னை புறக்கணிப்பதாகவும் புகார் கூறினார். 

இது குறித்து கடிதம் எழுதியும் பதில் இல்லை என்று கூறிய துணை மேயர்,  தனது பெயரையும் சேர்ந்து, தான் கொண்டு வந்த கல்வெட்டையும் வைக்க மறுத்துவிட்டதாக புகார் கூறினார்.  துணை மேயரின் தர்ணா போராட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மேயர் இந்திராணி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  அதன்பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

இதையும் படிக்க:  வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்...!!