மூதாட்டியை வெயிலில் விட்டு சென்ற மருத்துவமனை ஊழியர்...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்...!

மூதாட்டியை வெயிலில் விட்டு சென்ற மருத்துவமனை ஊழியர்...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்...!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் கவனமற்ற முறையில் பராமரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நோயாளிகள் அல்லது அவர்களோடு இருப்பவர்கள் ஊழியர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் கோபத்துடன் பதில் அளிப்பது, நோயாளிகளிடம் கடும் சொற்களால் பேசுவது என்பது போன்ற பல குற்றசாட்டுகள் உள்ளன..  

இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மீது அக்கறையற்ற தன்மையை வெளிக்காட்டும் சம்பவம் விடியோவாக எடுக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த காட்சிகள் பரவி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நோயாளியான மூதாட்டி ஒருவரை ஸ்ட்ரெக்சரில் இழுத்து சென்ற ஊழியர் ஒருவர், பாதி வழியில் மூதாட்டியை கடும் வெயிலில் நடுரோட்டில் விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று அந்த வேலையை முடித்துவிட்டு பின்னர் ஸ்ட்ரெக்சரை இழுத்து சென்ற சம்பவம் வீடியோவாக பரவுகிறது. 

மேலும், மருத்துவமனை வளாகத்தில் ஸ்ட்ரெக்சர் கொண்டு செல்லப்படும் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் நோயாளிகள் அனுபவிக்கும் சிரமங்கள் ஏராளம் என  நோயாளிகளோடு இருப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு ஊழியர்களும் நோயாளிகள் மீது கவனம் செலுத்தி அக்கறையுடன் நடத்தாமல், மோசமாக நடத்துவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து, ஊழியர்களின் அஜாக்கிரதையான செயல்பாட்டை பொறுப்பான அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையே தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். 

இதையும் படிக்க : ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்...மருத்துவமனையில் விட்டுச் சென்ற அவலம்!