யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண்...

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் அடைந்த நிலையில், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண்...

கிருஷ்ணகிரி | அஞ்செட்டி அடுத்துள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் செங்கொடி (45). கணவனை இழந்த இவர், தனது மூன்று பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறார். இவர் பூக்களை விலைக்கு வாங்கி அதனை தொடுத்து தேன்கனிக்கோட்டை சந்தையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இன்று வழக்கம் போல செங்கொடி தனது வீட்டில் பூக்களை தொடுத்து ஒரு கூடையில் வைத்து தலைமேல் சுமந்து கொண்டு பூஞ்சோலை கிராமத்தில் இருந்து அருகில் உள்ள வண்ணாத்திப்பட்டி கிராமத்திற்கு ஒத்தையடி பாதையில் சென்றுள்ளார். அப்போது திடீரென குறுக்கே வந்த காட்டு யானை ஒன்று அவரை துரத்தி தாக்கியுள்ளது.

மேலும் படிக்க | பணிக்கு வராத மருத்துவர்கள்...! வருகை பதிவில் கையொப்பம்..! நோயாளிகள் அவதி.. !

பின்னர் காட்டு யானை அவரை தூக்கி புதருக்குள் வீசி உள்ளது. இதில் செங்கொடிக்குகை, கால்கள், உடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. செங்கோடியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அப்பகுதிக்கு சென்று அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பூஞ்சோலை வண்ணாத்திப்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | வாழைத் தோட்டத்தை துவம்சம் செய்த யானைக் கூட்டம்...!