தந்தையின் துயரம் போக்கிய  தனயன்! 

தந்தையின் துயரம் போக்கிய  தனயன்! 

செங்கல் சூலையில் வேலை பார்க்கும் தந்தையின் கஷ்டத்தை போக்க, மகன் செய்த மகத்தான காரியம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. பள்ளி படிப்பை கூட முடிக்காத இளைஞர் வினோத் தனது கடின உழைப்பால், அதிவேகமாக செங்கல் அறுக்கும் இயந்திரத்தை யுடியூப் வீடியோ பார்த்து வடிவமைத்து அசத்தி உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி ஊராட்சி வடக்கு தெருவை சார்ந்தவர் இளைஞர் வினோத்(25). பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த வினோத், மீண்டும் தேர்வு எழுத விருப்பம் இல்லாமல் கல்வியின் மீது நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது வெல்டிங் பட்டறையில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். வினோத்தின் தந்தை சந்திரசேகர்,  காட்டுச்சேரியில் சிறிய அளவில் செங்கல் சூளை ஒன்று வைத்து, செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். 

செங்கல் அறுக்கும் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் சந்திரசேகருக்கு மகன் வினோத் அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை படும் கஷ்டத்தை பார்த்த வினோத், தந்தையின் கஷ்டத்தை போக்க தீர்மானித்தார். ஆன்லைன் மூலம் செங்கல் அறுக்கும் இயந்திரம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதனை தந்தைக்கு எப்படியாவது வாங்கி கொடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் தான் செய்து கொண்டிருந்த வெல்டிங் வேலைக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தினமும் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து வந்துள்ளார். இருப்பினும் இயந்திரத்தின் விலை அதிகமாக இருந்ததால் அவரால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

ஏற்கனவே வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்த அனுபவம் உள்ளதால் அவரே அதை செய்துவிடலாம் என்று தீர்மானித்தார். அதற்காக யுடியூபில் செங்கல் அறுக்கும் இயந்திரம் செய்வது எப்படி என்ற வீடியோவை பார்த்து அதற்கு தேவையான பொருட்களை தான் பார்த்து வந்த வெல்டிங் வேலையில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு செங்கல் அறுக்கும் இயந்திரம் செய்வதற்கான பொருட்களை வாங்கி சேமித்து வைத்து கொண்டார். இரும்பு பட்டைகள் இயந்திரம் நகர்வதற்கான சக்கரம் உடற்பயிற்சி கூடத்தில் பயன்படுத்தக்கூடிய கயிறு தேக்கு மர துண்டுகள் பூச்சி மருந்து தெளிப்பான் உள்ளிட்ட மேலும் தேவையான பொருட்களை வாங்கி எப்படியாவது இயந்திரத்தை செய்து விட வேண்டும் என்ற முயற்சியால் இறங்கியுள்ளார். 

அப்போது அவரின் முதல் முயற்சி தோல்வியடைய சற்றும் மனம் தளராமல் மீண்டும் இயந்திரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் இது "எல்லாம் உனக்கு சரிவராது இதை தூக்கி போட்டுவிட்டு உன்னுடைய வேலையை பார்" என்று பேசிய போதும் அதனை சிறிதும் கண்டுகொள்ளாத வினோத், தன்னுடைய கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலும் இயந்திரம் செய்யும் முயற்சி 4 முறை தோல்வி அடைந்தும் சற்றும் மனம் தளராமல்  மீண்டும் மீண்டும் அதனை முயற்சி செய்து, தான் செய்த தவறுகளை சரி செய்தார்.  

இறுதியில் வெற்றிகரமாக இயந்திரத்தை வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டார். இவரின் அசத்தலான கண்டுபிடிப்பினால் ஒரு நாளைக்கு 500 செங்கல் மட்டுமே அறுத்து வந்த தந்தை, தற்போது ஒரு நாளைக்கு 2000 செங்கல் அடுத்து வருகிறார். தந்தையின் கஷ்டத்தை இலகுவாக்க மகன் கண்டுபிடித்த இந்த கருவி நிச்சயம் பாராட்டுதளுக்குரியதே.  சமூக வலைதளங்களில் பல்வேறு விரும்பத் தகாத வீடியோக்களை பார்த்து, தவறான வழிக்கு செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் தன் தந்தையின் கஷ்டத்தை போக்க தன்னுடைய கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலும் யுடியூப் வீடியோவின் உதவியுடன் செங்கல் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்து அசத்தியுள்ள இந்த இளைஞர் வினோத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படிக்க:‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...!!