போக்குவரத்து விதிமீறல்.. தானியங்கி கேமாராக்கள் கொண்டு அபராதம் விதித்த போக்குவரத்துத்துறை..!

போக்குவரத்து விதிமீறல்.. தானியங்கி கேமாராக்கள் கொண்டு அபராதம் விதித்த போக்குவரத்துத்துறை..!

இ-செல்லான் முறையில் வழக்கு

சென்னை போக்குவரத்து காவல் பகுதிக்கு உட்பட்ட 11 சந்திப்புகளில், வாகன பதிவெண்ணை  அடையாளம் காணும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இ-செல்லான் (E-Challan) முறையில் வழக்கு பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் செல்வது, மூன்று பேர்கள் பயணிப்பது, எதிர் திசையில் வாகனத்தை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தானியங்கி கேமராக்கள்

இதில், என் எஸ் சி போஸ் சாலை,  வெலிங்டன் சாலை,  அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை,  ஆர்.கே மட் சாலை, சின்னமலை, எஸ்.ஐ.டி கல்லூரி சந்திப்பு, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணா சாலை மற்றும் எல்டம்ஸ் சாலை சந்திப்பு உள்ளிட்ட 15 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள வாகன பதிவெண்ணை  அடையாளம் காணும் தானியங்கி கேமராக்களில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விதிமீறல்களில் ஈடுபட்ட 69 வாகன ஓட்டிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதில் 35 பேர் சென்னை காவல் ஆணையர் கூட்டரங்கிற்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: தொழில்நுட்ப வசதியால் தடுத்து நிறுத்தப்பட்ட கடத்தல் சிலை விற்பனை..!

Paytm மூலம் அபராதம்

போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரியின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறிய 35 பேரில், 6 பேர்கள் 4,200 ரூபாயை Paytm மூலம் அபராத தொகையை உடனடியாக செலுத்தியது மட்டுமல்லாமல், மீதம் உள்ளவர்கள் பின்னர் செலுத்துவதாக கூறியதை அடுத்து அவர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிகளை மதித்து நடக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.