விடைபெற்றார் சரத்பாபு...திரண்ட பிரபலங்கள்...கிண்டி மயானத்தில் உடல் தகனம்!

விடைபெற்றார் சரத்பாபு...திரண்ட பிரபலங்கள்...கிண்டி மயானத்தில் உடல் தகனம்!

நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து, திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் தகனம் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் கடந்த 1951-ம் ஆண்டு பிறந்த சரத்பாபு, 1973-ம் ஆண்டு ராமராஜ்ஜியம் என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தார். பின்னர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான 'நினைத்தாலே இனிக்கும்', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து', 'சலங்கை ஒலி' உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு நேற்று காலமானார். இதனையடுத்து, ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகை சுஹாசிணி மணிரத்னம், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க : பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்...அரசுக்கு இராமதாசு வலியுறுத்தல்!

இதனிடையே நண்பரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், தன்மீது மிகுந்த பாசம் கொண்டவர் சரத்பாபு எனவும், தாங்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றித் திரைப்படங்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, பிற்பகல் 12.30 மணி அளவில் தியாகராய நகர் வீட்டில் இருந்து கிண்டியில் உள்ள மயானத்திற்கு சரத்பாபுவின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.  இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.