'தைரியம்'.. 'பண்பு'.. உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமை - வனிதா விஜயகுமார் போஸ்ட்!!

ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித்தின் ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

'தைரியம்'.. 'பண்பு'.. உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமை - வனிதா விஜயகுமார் போஸ்ட்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருது விழாவானது கடந்த நான்கு வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டின் பொழுது வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு" என்று கூச்சலிட்டார். நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது மனைவி குறித்து மேடையில் கிண்டல் செய்த தொகுப்பாளரை அறைந்ததற்காக நடிகர் வில் ஸ்மித் வருத்தமும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 

வன்முறை அதன் அனைத்து வடிவங்களிலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது.  எனது செலவில் நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜாடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது, நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.

நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ்.   நான் தவறு செய்தேன். நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனை குறிக்கவில்லை.  அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.

அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.  மற்றபடி நம் அனைவருக்கும் ஒரு அழகான பயணமாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழ்ந்த வருந்துகிறேன் எனத் தெரிவித்தார்.

வில் ஸ்மித் செய்யலை விட அவர் மன்னிப்பு கேட்டதற்காக நிறைய பேர் பாராட்டினர். அந்த வகையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது மனைவியை காக்கும் தைரியம். அது போல தனது தவறை ஒப்புக் கொள்ளும் பண்பு... நான் உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் வில் ஸ்மித்" என்று பதிவிட்டுள்ளார்.