குற்றால அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி!

குற்றால அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி!

குற்றால அருவியில் நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அனைத்து அருவிகளும் நீரின்றி காணப்பட்டது. அருவிக்கரையில் விழுந்த சிறிதளவு நீரில் சுற்றுலா பயணிகள் குளியல் போட்டு சென்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக  குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது அருவி நீரில் இலை, தளைகளுடன், கற்களும் விழுந்ததால்  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி ஐந்தருவி மற்றும் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட இரண்டு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று காவல்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் மழை முற்றிலும் குறைந்து குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மழை இன்றி குற்றால அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வந்த நிலையில் குற்றாலம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் என்பது வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில், தற்போது மழை பெய்து குற்றால அருவியில் மீண்டும் தண்ணீர் ஆனது சீராக கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிக்க:திமுக தலைமைக்கு தொடர்ந்து தலைவலியை உருவாக்கும் மேயர்கள்!