அரசியல் பேச மனம் நினைக்கிறது; அனுபவம் வேண்டாம் என மறுக்கிறது - ரஜினிகாந்த பேச்சு!

அரசியல் பேச மனம் நினைக்கிறது;  அனுபவம்  வேண்டாம் என மறுக்கிறது - ரஜினிகாந்த பேச்சு!

என்டி ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் தொலைதூர பார்வையான  ’2020 - 2040க்கு உண்டான திட்டம்’ செயல்படுத்தப்பட்டால் ஆந்திர மாநிலம் இந்தியாவில் எங்கோ சென்றுவிடும் என்று கூறினார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிற்கு புறப்பட்டார். 

இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்டி ராமராவ் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், என்டி ராமராவ் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகள் மற்றும் மாநாடுகளில் ஆற்றிய உரைகளை தொகுத்து உருவாக்கப்பட்ட வரலாற்று உரை  என்ற  இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். 

இதையும் படிக்க : பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் - சீமான் கண்டனம்!

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என மனம் நினைக்கிறது; ஆனால், அனுபவம் அரசியல் பேச வேண்டாம் என்று கூறுகிறது. இருப்பினும் மூத்த அரசியல்வாதி  எனது நண்பர் சந்திரபாபு நாயுடு இருக்கக்கூடிய இந்த மேடையில் சிறிது அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன்.

30 ஆண்டுகால நண்பரான சந்திரபாபு நாயுடு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியல் அனுபவம் வாய்ந்தவர், அதற்கு உதாரணம், 1996 ஆம் ஆண்டு தொலைதூரப் பார்வையுடன் விஷன் 2020 என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை கொண்டு வந்தவர். ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக அறிவித்து அதற்குண்டான பணிகளை மேற்கொண்டு, பில்கேட்ஸ்  உள்ளிட்டவர்களை ஹைதராபாத்திற்கு வரவழைத்து பல நிறுவனங்களை தொடங்கினார். தற்பொழுது ஹைதராபாத் தகவல் தொழில்நுட்ப நகராக விளங்கி வருகிறது. ஹைதராபாத்துக்கு சென்றால் இந்தியாவில் இருக்கிறோமா நியூயார்க்கில் இருக்கிறோமா என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது என்றும், பொருளாதாரமும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் சந்திர பாபு நாயுடுவை சந்தித்த போதும் கூட, அவர் ஞானத்தில் தோன்றிய 2040 விஷன் என்ற தொலைதூரப் பார்வையுடன் திட்டம் தயார் செய்து வைத்துள்ளார். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆந்திரா இந்தியாவில் எங்கோ சென்று விடும் என்றும், அது நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.