20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ஜீவஜோதி

இருபது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துகிறார் ஜீவஜோதி. 

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ஜீவஜோதி

சினிமாவாகிறது அவரது வாழ்க்கை கதை. junglee பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பவானி ஐயர் இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார். 

விளம்பரத்துறையில் வாழ்க்கையை துவங்கிய பவானி ஐயர், ஸ்டார் டஸ்ட் சினிமா பத்திரிகையின் ஆசியராக இருந்து, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய அமிதாப்பச்சன்நடித்த பிளாக் படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியர் ஆனார். தொடர்ந்து சுவாமி, குசாரிஷ், லூடெரா, ஒன் நைட் ஸ்டாண்ட், ராசி ஆகிய படங்களுக்கு திரைக்கதை அமைத்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் பரபரப்பாக இடம்பெற்ற ஒரு பெயர்தான் ஜீவஜோதி. காதல் கணவரின் கொலைக்காக மிக நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி நீதியை பெற்றவர். 

தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை விசாரணைக்காக தொலைத்தவர் ஜீவஜோதி. வேதாரண்யத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்த ஜீவஜோதி தற்போது தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.

தன்னிடம் வேலை பார்த்த மேலாளரின் மகள் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொள்ள விரும்பிய சரவணபவன் ராஜகோபாலின் உறுதி, அதற்கு இடையூறாக இருந்த ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்படும் அளவிற்கு போனது. அதற்கு நீதி கேட்டு 18 ஆண்டுகள் போராடி நீதியை பெற்று விட்டார் ஜீவஜோதி.

பிரின்ஸ் சாந்தகுமாரின் கொலையில் ராஜகோபாலின் மேல் வழக்கு பதிவு செய்த பின்னர் விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே நிறைய பிரச்சனைகளை சந்தித்ததாகவும் இரண்டு பெரிய மனிதர்கள் பெரிய தொகையை கொடுத்து தன்னை சமாதனம் செய்ய முயற்சித்ததாகவும். ஆனால் தான் அதற்கெல்லாம் உடன்படாமல் சாட்சி சொல்வேன் என்று உறுதியாக இருந்ததாகவும் பலமுறை மனம் திறந்திருக்கிறார். அன்றைக்கு தைரியமாக நின்று சாட்சி சொல்லாமல் மட்டும் போயிருந்தால் இன்றைக்கு யார் முன்னாடியும் தைரியமாக நிற்கமுடியாது. மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும் என்று பல நேரங்களில் சொல்லி வந்திருக்கிறார்.

காதல் கணவர் கொலைக்காக 18 ஆண்டுகளாக வழக்கில் போராடி வந்துந்தும் தனக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும், ’ஒரு நாள் கூட உங்களால் ஜெயில்ல இருக்க முடியாதா?’ என்று நீதிபதியே சரவணபவன் ராஜகோபாலை பார்த்து கேட்கும் அளவிற்கு, அவர் வழக்கில் இருந்து தப்பிக்க நினைத்தார். 18 வருடங்களாக போராடியும் நீதி வென்றாலும் அவரை ஒரு நாள்கூட சிறைக்கு அனுப்ப முடியவில்லையே என்கிற ஆதங்கம் தனக்கு இருப்பதாகவும் அவர் தனது மனக்குறையை சொல்லி வருகிறார்.

வழக்குகளால், மிரட்டல்களால் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்த காலகட்டங்களில் ஜெயலலிதாதான் தனக்கு ஆறுதலாக இருந்தார் என்றும் அவர் தான் வழக்கில் பல உதவிகள் செய்தார் என்றும் தெரிவித்திருக்கிறார் ஜீவஜோதி. இன்னும் சொல்லப் போனால் தான் உயிரோடு இருப்பதற்கு காரணமே ஜெயலலிதாதான் என்று பலமுறை அவர் சொல்லியிருக்கிறார் . அப்படியிருந்தும் அவர் ஏன் அதிமுகவில் இணையவில்லை. 
பாஜகவில் இணைந்தார் என்ற கேள்விகள் இருக்கும். ஜெயலலிதா இருக்கும் வரைக்கும் அவர் அரசியல் பற்றி யோசிக்கவே இல்லையாம் அவரின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்கிறது. அதிமுக தற்போதிருக்கும் தலைவர்களை பிடிக்காததால் அதிமுகவுக்கு செல்லாமல் பாஜகவிற்கு சென்றிருப்பதாக அவர் பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்.

ஜெயலலிதா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன், ஜெயலிதா தான் தனக்கு பிடிக்கும் என்று அவரை மாதிரியான உறுதியான பெண் நான் என்று அடிக்கடி சொல்லும் ஜீவஜோதி , தஞ்சாவூரில் செட்டிலான பிறகு டெய்லரிங் தெரியும் என்பதால் சிறியதாக டெய்லரிங் ஷாப் ஆரம்பித்தவர், பெரிய அளவில் ஆடை தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். ஆடைகளை ஏற்றுமதியும் செய்து வருகிறார். தனது தந்தை ராமசாமியின் பெயரில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். தண்டபாணி என்பவரை மணந்து கொண்ட ஜீவஜோதிக்கு கவின் கிஷோர் என்ற மகன் இருக்கிறான் .

காதல், துரோகம், கொலை, வழக்கு, நீதி என்று என்று ஒரு நெருப்பு பந்து உருண்டு கிடக்கும் தனது வாழ்க்கையை அவர் உலகுக்கு சொல்ல நினைக்கிறார். அதனால்தான் தனது வாழ்க்கை கதை சினிமாவாக வர அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். பவானி ஐயர் இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார். ஜீவஜோதியின் பாத்திரத்தில் நடிக்கவும், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது.