வலிமை பிப்.24 இல் ரிலீஸானதை வைத்து...அஜித் மீது அரசியல் சாயம் பூசுனா எப்படிங்க? ஒரு நியாயம் வேணாம்மா...?

அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானதை அடுத்து அவர் அரசியலில் வரபோகிறார் என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை பிப்.24 இல் ரிலீஸானதை வைத்து...அஜித் மீது அரசியல் சாயம் பூசுனா எப்படிங்க? ஒரு நியாயம் வேணாம்மா...?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அஜித், தன் மீது எந்த வித அரசியல் சாயமும் விழுந்துவிட கூடாது என்பதற்காகவே சினிமா படங்களில் கூட அரசியல் சார்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில்லை. அதேசமயம் அரசியல் கிசுகிசுக்களுக்காகவே தனது ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர் தான் நடிகர் அஜித். சமீபத்தில் கூட தன் பெயரை  ‘தல’ அஜித் என்று யாரும் கூறக்கூடாது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில் அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கூறிய போதே அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை அஜித் வெளியிட்டிருந்தார். அதில் எந்த அரசியல் கட்சிகளும் தனது பெயரை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இப்படி எல்லா விஷயத்திலும் தன் மீது அரசியல் சார்ந்த எதுவும் வந்துவிடக்கூடாது என்று கண்ணும்கருத்துமாய் இருக்கும் அஜித், தற்போது அவர் அரசியலுக்கு வர போவதாக  ஒரு டாக் இணையத்தில் பரவி வருகிறது.

அதற்கு காரணம் வலிமை படம் தானா. கடந்த மாதம் 24-ஆம் தேதி வலிமை படம் ரிலீசானதையடுத்து, ஜெயலலிதாவின் பிஏ பூங்குன்றம் போட்ட பேஸ்புக் போஸ்ட்தான் முக்கிய காரணம். அந்த பதிவில் புரட்சித் தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார். அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா, அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. அஜித் விரைவில் அரசியலும் வருவார் இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் காட்டுத்தீ போல பரவ, இதை பார்த்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மரியாதைக்குரிய ஊடக உறுப்பினர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இவர்கள் இருவரின் பதிவை பார்த்த பிறகு...ஜெயலலிதாவின் பிஏ பூங்குன்றம் போட்ட போஸ்ட்டிற்கு  என்ன காரணம் என்று பார்த்தால், அஜித்தின் வலிமை படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியானதுதான். அந்த தேதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அது போல் அவர் இறந்த டிசம்பர் 5ஆம் தேதி வலிமை படத்தின் அம்மா பாடல் வெளியானதும் தான் இதற்கெல்லாம் காரணமாம்.

முதலில் வலிமை படம் 24 ஆம் தேதி வெளியானது அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவியின் நினைவு தினம் என்பதால், அவர் அன்றையதினம் வெளியிட்டிருக்கலாம். அதவிட்டுட்டு அஜித் அதிமுக தொண்டர்களை அரவணைக்க அரசியலுக்கு வருகிறார் என்று  தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சு போட்டு பேசுறாங்க?.