பாரம்பரிய முறையில் நடந்த 'மாடுகள் மாலை தாண்டும் விழா'!

பாரம்பரிய முறையில் நடந்த 'மாடுகள் மாலை தாண்டும் விழா'!

விராலிமலை அருகே எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவில் மாலை தாண்டும் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 

விராலிமலை அருகே ஜெயமங்கலம் குப்பாநாயக்கர் பண்ணையில் எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் திருவிழாவை முன்னிட்டு மாலை தாண்டும் விழா(எருது விடும் விழா) வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த வருடம் இக்கோவில் திருவிழா நடத்துவதாக ஊர்பொதுமக்கள் முடிவு செய்து அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழாவானது தொடங்கியது. அன்று முதல் அப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலிலேயே தங்கி விரதமிருந்து சமைத்து உண்டு வந்தனர்.

அதனைதொடர்ந்து இன்று  விழாவானது தொடங்கியது. அதிகாலை முதல் பெரூர், தேசிய மங்களம், வையம்பட்டி, வில்லுகாரன்பட்டி, தொப்பம்பட்டி, தோகமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மாடுகளுக்கு உள்ளூர் பெண்கள் பாரம்பரிய முறைப்படி பாதபூஜைகள் செய்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ஜெயமங்களத்திலிருந்து சுமார் 2 கி.மீ அப்பால் உள்ள பகுதியிலிருந்து அனைத்து மாடுகளையும் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டு அதில் முதலாவதாக கரூர் மாவட்டம் கோவில்பட்டியைச்  எருதுகுட்டை பெருமாள் சுவாமி கோவிலில் உள்ள பசுமநாயக்கர் மந்தைக்கு வந்தடைந்த மாட்டிற்கு சிறப்பு பரிசாக மஞ்சள் மற்றும் எலும்பிச்சம்பளம் கொடுக்கப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவையொட்டி கோவிலின் அருகே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்கள் சமூகத்திற்கு உண்டான பாரம்பரிய உடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊர் ஆண்கள் மற்றும் இளைஞர்கள் மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருப்பது மற்ற ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இந்த கிராம பொதுமக்கள் யாரும் வெளியே செல்லும் போது உணவகத்தில் உணவு அருந்தாமல் இருப்பது மேலும் சிறப்பாகும்.

இதையும் படிக்க:மேகதாட்டு அணை: "தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது" பி.ஆர்.பாண்டியன் வருத்தம்!