காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வாரா விஜய்..?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வாரா விஜய்..?

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இன்று கலந்தாலோசனை நடத்தி வருகிறார். இதில் அவரது ரசிகர் சங்க நிர்வாகிகள் தொகுதி வாரியாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள கேள்வி நடிகர் விஜய் அரசியலுக்கு வரவாரா என்பதே. ஏற்கனவே கடந்த மாதம் தொகுதி வாரியாக, 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியதையொட்டி  எழுந்த இந்த குழப்பம், இன்று மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஏற்கனவே அரசியலில் ஆளுமை செலுத்தி வரும் நபர்கள் அவர்களுக்கே உரிய அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்  ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர்ப்பை விட ஆதரவே அதிகம் காணப்படுகிறது. 

Vijay meets and honours students; speech goes viral - Bharat Times

தமிழ் சினிமாவிற்கும் அரசியலுக்குமான பந்தம் மிக ஆழமானது. உலகின் பல நாடுகளிலும் கலைத்துறையினர் அரசியலில் பங்கெடுத்து வரும் இதேவேளையில், தமிழ்நாட்டில் சினிமா சில நேரங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. எப்படியாவது அடித்து பிடித்து ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தவர்கள் கூட முதலமைச்சர் கனவில் மிதந்துகொண்டிருக்கும் நடிகர்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நெடுங்காலம்  முதலமைச்சர்களாக இருந்து எம்ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முன்னர் சினிமா நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதும் இதற்கு ஒரு காரணம். கலைஞர் கருணாநிதி கூட சினிமா படங்களுக்கு வசனம் எழுதியவர்தானே. இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூட தன் இளம் வயதில் சினிமாவில் நடித்தவர்தான். இதனால் சினிமா துறையை சேர்ந்த பலருக்கும் அந்த ஆசை இருந்தே வருகிறது.  

அந்த வரிசையில் அடுத்து சினிமாவிலிருந்து நடிகர் விஜய் அரசியலில்  களமிறங்க உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கிய  எம் ஜி ஆர் 5 வருங்களுக்கு உள்ளாகவே முதலமைச்சரானார். நடிகர் விஜகாந்த் கட்சி தொடங்கி முதல் தேர்தலில் எம் எல் ஏவாகவும், இரண்டாவது தேர்தலில் எதிர்கட்சி தலைவராகவும் மாறினார். அந்த வகையில் அரசியலுக்கு திரைத்துறை ஒரு சிறந்த நுழைவு வாயிலாகவே உள்ளது. எம் ஜி ஆரை போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவதாக பலமுறை எதிர்பார்க்கப்பட்டும் அவர் அரசியலுக்கு வரவில்லை. ரஜினிக்காக காத்திருந்து கடுப்பான அவரது ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் ஐக்கியமாகி விட்டனர். இப்போது  ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறுபவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். எல்லோருக்கும் வயதாகிவிட்டது. ஆனால் பாட்ஷா, படையப்பா என உட்ச கட்டத்தில் இருந்த போது ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், அப்போதே ஆட்சி அதிகாரத்தை பிடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம். ஆனால் ரஜினி வருகிறேன், வருகிறேன் என்று சொல்லியே அரசியலுக்கு வராமல் விட்டுவிட்டார்.

Rajinikanth Enters Politics: Tamil Nadu And Its Actor Politicians | Mint

இப்போது நடிகர் விஜயும் கூட அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகளை பார்த்து வருகிறார். அதற்கான அடித்தளமே இது போன்ற சந்திப்புகள் என்று கூறப்படுகிறது. இது அவருக்கு சரியான நேரமும் கூட. இப்போது கட்சி தொடங்கினால்,  2026ல் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டால் கூட ஒரு சில மாற்றங்களை அவரால் கொண்டு வர முடியும் ஆனால் இது போன்ற சரியான நேரத்தில் அரசியலுக்கு வராமல் போனால் பின்பு அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம். அப்படியே வந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாமலும் போகலாம். அரசியலுக்கு வரும் விஜயின் முயற்சிகளில் இது முதன்முறை அல்ல. ஏற்கனவே தலைவா திரைப்படம் வந்த போது விஜய் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. இது அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு கடும் கோவத்தை உருவாக்கியது. இதனால் அத்திரைப்படம் வெளியாவதே சிக்கலுக்குள்ளானது. பின்னர் டைம் டு லீட் ( இது தலைமை ஏற்கும் நேரம்) என்ற துணை தலைப்பை நீக்கியதற்கு பிறகே இந்த திரைப்படம் வெளியானது.  அதன் பிறகு அரசியலுக்க வருவதை விஜய் தவிர்த்தே வந்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் நடந்த அரசியல் மாற்றங்கள், விஜய்க்கு சாதமாகவே உள்ளன. எனவே இந்த முறை விஜய் அரசியலுக்கு வருவார் என்றே பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘Existing political parties, politicians view welfare as alms’: Kamal ...

அதே சமயம் சினிமாவில் சாதித்த பலர் அரசியலில் கோட்டை விட்டிருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி உலக நாயகன் கமலஹாசன் வரை சினிமாவில் புகழ் இருந்தும் அரசியலில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எதிர்கட்சியான அதிமுகவோ இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது. அதன் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போதுதான் தன்னை தலைமையாக வளர்த்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதனால் பாஜகவும், நாம் தமிழரும் தாங்கள் தான் எதிர்கட்சிகள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது அவருக்கு சாதகமானதாகவே இருக்கும். நடிகர் எம்ஜிஆர்-க்கு பின்னர் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என அதிகமாக அண்ணாவின் நாமத்தை  உச்சரிக்கும் விஜய், எம் ஜி ஆரை போல அதிரடியாக களம் இறங்கி சாதனை படைப்பாரா அல்லது ரஜினிபோல வராமலே ஏமாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிக்க   | இனி திரையரங்குகளில் ஐபிஎல், கால்பந்து , அழகிப்போட்டிகள் ஒளிபரப்ப திட்டம் - திரையரங்க உரிமையாளர் சங்கம்.