அசாம் வெள்ளத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைப்பதற்கான நிதியுதவியை அசாம் அரசு இன்று தொடங்கியது.

அசாம் வெள்ளத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன

இந்த ஆண்டு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2.04 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 309 குடும்பங்களின் வீடுகள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளை புனரமைப்பதற்கான நிதியுதவியை மாநில அரசு இன்று வழங்கத் தொடங்கியது. நிதியுதவியை முறையாகத் தொடங்கிவைத்து, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெற்கு அசாமில் கச்சார் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, 81,538 வீடுகள் சேதமடைந்துள்ளன, அதைத் தொடர்ந்து கரீம்கஞ்ச் பகுதியில்28,364 வீடுக்ளும், நாகோன் பகுதியில் 15,200 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளத்தில் சேதமடைந்த 2,04,348 வீடுகளில், 5,185 வீடுகள் முழுமையாகவும், மீதமுள்ளவை பகுதியளவும் சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அரசு சரிபார்த்து, மாவட்ட வாரியாக நிதி வழங்குவதற்கான பட்டியலைத் தயாரித்தது. இன்று, நாங்கள் 119.10 கோடி ரூபாயை இந்த நோக்கத்திற்காக வழங்குகிறோம்" என்று சர்மா கூறினார்.

"இது தவிர, இந்த ஆண்டு வெள்ளத்தில் வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட 309 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்குவோம்" என்று சர்மா கூறினார்.