5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு : ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜ.க.?

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு : ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜ.க.?

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ளது. இதில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் அம்மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், பஞ்சாப்பில்  ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கிலும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படும் நிலையில் காங்கிரசும் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 மாநில தேர்தலுக்கான முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 2017 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிக இடங்களை கைப்பற்றி தனது பலத்தை நிரூபிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் மிக சொற்ப இடங்களையே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்காக வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதன்முறையாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மான் பஞ்சாபின் அடுத்த முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கியது, உட்கட்சி பூசல் போன்ற காரணங்களால் காங்கிரஸ் இம்முறை ஆட்சியை இழக்கும் எனவும் கூறப்படுகிறது. இதேபோல் கோவாவிலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.