இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம்... விழாக்கோலம் பூண்ட ஹிண்டன் விமானப்படை தளம்...

இந்திய விமானப்படையின் 89 வது தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம்... விழாக்கோலம் பூண்ட ஹிண்டன் விமானப்படை தளம்...

நாட்டின் பாதுகாப்புக்காக விமானப்படை உருவாக்கப்பட்டு, இன்றுடன் 89 வது ஆண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு காஜியாபாத்தில் உள்ள தளத்தில், இன்று கண்கவர் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் முப்படை தளபதிகளும் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 1971ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரின் முடிவில் வங்கதேசம் நாடு உருவானது. இதில் தொடர்புடைய இடங்கள், மற்றும் மக்களின் அடையாளங்கள் இந்த விமானப்படை அணிவகுப்பில் பிரதிபலிக்கப்படவுள்ளன. மூன்று துணை ராணுவ துருப்புகளின் உதவியுடன்  டாங்கெயில் ஏர் டிராப் ஆப்ரேஷனும் செய்து காட்டப்படவுள்ளது. 

லாங்வாலா ஆப்ரஷேன் வெற்றி நிகழ்வும்,  6 போர் விமானங்கள் மூலம்  செய்து காட்டப்படவுள்ளது. பரம்வீர் சக்ர விருது பெற்ற நிர்மல்ஜித் சிங் சேகனை கவுரவிக்கும் விதமாக ரபேல், எல்சிஏ தேஜஸ், ஜாகுவார், மிக்-29 மற்றும் மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்கள் இணைந்து சாகசம் செய்து  வருகின்றனர்.  மேலும் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பும் நடந்து வருகிறது.

விமானப்படை தினத்தை முன்னிட்டு, வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இந்திய விமானப்படையானது தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு இணையானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.   சவாலான நேரங்களிலும்,  மனிதாபிமான உணர்வு மூலம் நாட்டைப் பாதுகாப்பதில் அவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டுவதாக மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.