பிரதமரின் ஆளுமையை மிகச்சரியாக விவரிக்கும் வார்த்தைகள் நீக்கம் - ராகுல் காந்தி விமர்சனம்!

பிரதமரின் ஆளுமையை மிகச்சரியாக விவரிக்கும் வார்த்தைகள் நீக்கம் - ராகுல் காந்தி விமர்சனம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை மக்களவை செயலகம் வெளியிட்ட நிலையில், பிரதமரின் ஆளுமையை மிகச்சரியாக விவரிக்கும் வார்த்தைகள்  நாடாளுமன்ற பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பயன்படுத்தக்கூடாத 50 வார்த்தைகள்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. அந்த கூட்டத்தொடரில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என கூறி மக்களவை செயலகம் 50 வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியை விமர்சிக்கும் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர்,  நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி உள்ளிட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை இந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார் ராகுல்காந்தி:

இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் இந்த செயல்பாட்டை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். அதில்,  பிரதமரின் ஆளுமையை மிகச்சரியாக விவரிக்கும் வார்த்தைகள் தற்போது  நாடாளுமன்ற பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிய இந்தியாவுக்கு ”அன்பார்லியமன்டரி” என்ற புதிய டிக்‌ஷனரி உருவாக்கப்பட்டுள்ளதாக, அவர் விமர்சித்துள்ளார்.