சூரியனை குறி வைக்கும் இஸ்ரோ...தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்1 !!

சூரியனை குறி வைக்கும் இஸ்ரோ...தயார் நிலையில் இருக்கும் ஆதித்யா எல்1 !!

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தற்போது மற்றொரு ஆய்வுக் கலத்தை சூரியனை ஆய்வு செய்ய அனுப்பத் தயாராகி வருகிறது.

ஆதித்யா எல்1-ஐ இம்மாதத்திற்குள் ஏவ இஸ்ரோ முயற்சித்து வருகிறது. சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இஸ்ரோ மேற்கொள்ளும் மிக முக்கியமான திட்டமாக ஆதித்யா எல்1 அமைய உள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும் என்பதால் சூரியனை நேரடியாக ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள, ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நிலையில்  இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது. சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என கூறபடுகிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து அதுபற்றிய தகவல்களை இஸ்ரோவுக்கு ஆதித்யா எல்1 அனுப்பும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளன.

இதையும் படிக்க || "எனது வாழ்க்கைக் கதைக்கு தேசம் ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி" முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்!

சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 ஏழு வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு கருவிகள் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற மூன்று கருவிகள் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 அருகே உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அந்த தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பும். இந்த ஏழு கருவிகள் முக்கியமாக சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கே இருந்து பெரிய அளவில் வெளிப்படும் நிறை (Mass) போன்ற பல விஷயங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். மேலும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களையும் பகுப்பாய்வு செய்ய உள்ளது.

எனவே ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த தேவையான அனைத்து பணிகளிலும் இஸ்ரோ முழு வீச்சில் ஈடுபடுத்தி வருகிறது. தற்போது சோதனை பணிகள் நிறைவு பெற்று  விண்கலம் தயாராக இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || தாய் தந்தையரை கவனிக்க தவறிய மகன்... கம்பி எண்ண வைத்த கோட்டாட்சியர்!!