சாலை விபத்துகளை குறைக்க ஆலோசனை கூட்டம் - புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

சாலை விபத்துகளை குறைக்க ஆலோசனை கூட்டம் - புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், பள்ளி நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு செயல்களை மேற்கொள்ள சபாநாயகர் செல்வம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி - விழுப்புரம் மற்றும் புதுச்சேரி - கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படுகின்ற விபத்துகளால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது, இதை தடுக்கும் வகையில் இவ்விவகாரத்தில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் செல்வம் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை ஏடிஜிபி ஆனந்த் மோகன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தன்யா, காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆணையம் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி - கடலூர் மற்றும் புதுச்சேரி - விழுப்புரம் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், சென்டர் மீடியன் அமைக்க வேண்டும், பள்ளி நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபட வைக்க வேண்டும், மற்றும் இந்த இரு சாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள சபாநாயகர் செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவையான நிதியை மாநில நிதி அதிகாரத்திலிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.