”பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யலாம்” டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

”பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யலாம்” டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்!

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யலாம் என பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி சாக்ஷி மாலிக், வினேஷ் பொகாட் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள், 45 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து சிறுமியின் புகாரின் பேரில் ஒரு போக்சோ வழக்கு, 6 வீராங்கனைகளின் புகாரில் மற்றொரு பாலியல் வழக்கு என இரு வழக்குகள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. 

இதையும் படிக்க : நீட் தேர்வு விலக்கு குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்கப்படும் - மா. சுப்பிரமணியன்!

இந்நிலையில் 208 அறிக்கைகள், வாட்ஸ்-அப்-உரையாடல்கள் என ஆயிரம் பக்கங்களுடன் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், உறுதியான ஆதாரங்கள் இல்லாததாலும், சிறுமி கோவத்தில் புகாரளித்ததாகக் கூறியும் போக்சோ வழக்கை ரத்து செய்யுமாறு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் புகாரளித்த அவரது தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போச்சோ ரத்து தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை, வரும் ஜூலை 4ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.