நாளை கரையை கடக்கும் பிபார்ஜாய் புயல்...முன்னெச்சரிக்கையை துரிதப்படுத்த அமித்ஷா உத்தரவு!

நாளை கரையை கடக்கும் பிபார்ஜாய் புயல்...முன்னெச்சரிக்கையை துரிதப்படுத்த  அமித்ஷா உத்தரவு!

பிபார்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். 

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபார்ஜாய்  புயலாக உருவெடுத்த நிலையில் அந்த புயல் போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. இந்த புயல் மாண்ட்வி கராச்சி இடையே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து குஜராத்தின், கட்ச், தேவபூமி, துவாரகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிக்க : நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்து தமிழ்நாட்டு மாணவன் சாதனை... !

இதனையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  8 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தேசிய பாதுகாப்பு படைகள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ‘பிபார்ஜாய்’ புயலின் தாக்கத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார். 

இதனிடையே பிபார்ஜாய்  புயல் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, பூஜ்ஜிய உயிரிழப்பை உறுதிப்படுத்தவும், சேதங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மறுஆய்வுக் கூட்டத்தின் போது பிரதமர் வழங்கிய வழிகாட்டுதல்களை விரைவாகச் செயல்படுத்தவும் வலியுறுத்தினார். உள்துறை அமைச்சகமும், மாநில அரசின் கட்டுப்பாட்டு அறையும் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்த அமித்ஷா, எந்த அவசர சூழ்நிலையையும் சமாளிக்க அரச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.