மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு பின்னால் தொழிலதிபர் பங்களிப்பா....!!

மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு பின்னால் தொழிலதிபர் பங்களிப்பா....!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் டெல்லி போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், உத்தரப்பிரதேச எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி நேரில் ஆதரவு தெரிவித்தார்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு  தெரிவித்து வரும் நிலையில், தற்போது பிரியங்கா காந்தி மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பெருமைமிக்க விளையாட்டு வீரர்களை மத்திய அரசு தெருவில் கண்ணீருடன் அமர வைத்து அழகு பார்ப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்தார்.

இது குறித்து நடத்தப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், பதவியை ராஜினாமா செய்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல எனவும் ஆனால் தான் தற்போது ராஜினாமா செய்தால் குற்றங்களை ஒத்துக் கொண்டதாகி விடும் எனக் கூறினார்.  மேலும் அவருடைய பணிக்காலம் முடியவுள்ளதாகவும்  3 பேர் அடங்கிய குழு 45 நாட்களில் தேர்தல் நடத்திய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மல்யுத்த வீரர்கள் தினமும் புதிய புதிய கோரிக்கைகளோடு வருகிறார்கள் எனவும் முதலில் எஃப்ஐஆர் பதிவு செய்ய கூறினார்கள் தற்போது என்னுடைய அனைத்து பதவிகளிலிருந்தும் விலக கூறுகிறார்கள் எனவும் கூறியதோடு ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தனக்கு எதிராக உள்ளதாகவும் 90 சதவீதம் ஹரியானா வீரர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் தான் குறிப்பிட்ட தொகுதிக்கு எம்.பியானது மக்களாலேயே தவிர வினேஷ் போகத்தால் அல்ல எனவும் பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய பிரிஜ் பூஷன் இந்த போராட்டத்திற்கு முன்னர் அவர்கள் தன்னை போற்றியதாகவும் திருமணத்திற்கு அழைத்து தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தன்னுடைய ஆசிர்வாதத்தை கேட்டதாகவும் தெரிவித்த அவர் கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை எனக் கூறினார்.

மல்யுத்த வீரர்களுடனான பிரியங்கா காந்தியின் சந்திப்பை குறித்து பேசிய பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்திற்கு பின்னால் பெரிய தொழிலதிபர்களும் காங்கிரஸ்ஸூம் இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பாஜகவை கர்நாடக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்...! கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராசன் கோரிக்கை...!!