சந்திரபாபு நாயுடுவின் மகனிடம் சிஐடி போலீசார் விசாரணை ..!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து அவருடைய மகன் லோகேஷிடம் இன்று ஆந்திர சிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஆந்திர முன்னாள் முதல்வர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 2015 ஆம் ஆண்டு அவருடைய ஆட்சி காலத்தில் ஆந்திர திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஆந்திரா சிஐடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில்,. அமராவதி தலைநகராக அறிவித்து ஆட்சி நடத்திய சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் தலைநகர அபிவிருத்தி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.

அமராவதி நகரில் உள்வட்ட சாலை அமைக்கும் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அந்த முறைகேடுகளில் சந்திரபாபு நாயுடு மகன்  லோகேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும் ஆந்திர சிஐடி போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்த குண்டூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, விசாரணையில் ஆஜர் ஆவதற்காக லோகேஷ் இன்று சிஐடி தலைமை அலுவலகத்திற்கு  வந்து சேர்ந்தார். அவரிடம்  மாலை ஐந்தரை மணி வரை விசாரணை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு குற்றச்சாட்டு, அரசு பைபர் நெட் முறைகேடு குற்றச்சாட்டு,சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் செய்த போது நடத்தப்பட்ட கல்வீச்சு மற்றும் வன்முறை ஆகிய  சம்பவங்களில் சந்திரபாபு நாயுடு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகியவற்றின் பேரில் சிஐடி போலீசார் அவரை கைது செய்யாமல் தடுக்க ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பு வக்கீல் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுக்கள் மீது நேற்று நடைபெற்ற விசாரணை முடிவில் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.